காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தன்னைப் புறக்கணித்து வந்ததாக வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். உத்தரபிரதேசம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் கொலை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட குஷ்பூ… தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், மனக்கசப்புகள் எல்லாம் நீங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இருந்து கடந்த வாரம் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை, மூத்த நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் எனக்கு பொறுப்புகள் ஏதும் தேவையில்லை எனவும் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார். ஆனால் கடைசி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை குஷ்பூ சந்திப்பதற்கு டெல்லி தலைமையானது நேரம் ஒதுக்கவில்லை. இதனால் உடனடியாக தன்னுடைய டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பினார்.
இந்த சூழலில்தான் தற்போது அவருடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் மற்றும் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால்தான் நேற்றைய தினம் இரவு தன்னுடைய கணவருடன் டெல்லி சென்றார் குஷ்பூ. இன்றைய தினம் அவர் அதிகாரபூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார். இது தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.