கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் குமார் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமாருடன் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்களான ராஜா, அய்யனார், அய்யனாரின் மனைவி பூங்காவனம், சேகர், ஏழுமலை, ஜெரால்டு போன்ற 6 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது பூங்காவனத்திற்கும், ராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் பூங்காவனத்திற்கு குமாரும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கோபம் அடைந்த பூங்காவனமும், ராஜாவும் இணைந்து குமாரை கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பூங்காவனம் மற்றும் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.