சேலம் மாவட்டத்தில் தடையில்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 800 படுக்கைகளில் 550 படுகைகள் ஆக்சிஜன் வசதியுடனும், மீதமுள்ள 250 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணி துரிதவேகத்தில் நடைபெற்று வருகின்றது என்றார்.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துமனையில் திரவ ஆக்சிஜனின் தேவை ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் ஆகும். இதனால் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தேவைக்கு ஏற்ப தினமும் ஆக்ஸிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.