அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில்,
முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள ஆண்டிமடம், விக்ரமங்கலம், கள்ளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வரிசையாக பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த 45 பவுன் நகையை மீட்டு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.