ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் ரொக்கம் 90 கோடி ரூபாய் தங்கம் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய் ஆப்ரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கல்கி குடும்பத்தினரால் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா அவரது மனைவி பிரீதா ஆகிய இருவரும் பினாமிகள் பெயரில் சொத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்த வருமானவரித் துறையினர் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட நடவடிக்கையாக விஜயகுமார் குடும்பத்தினரின் 907 ஏக்கர் நிலத்தை முடக்கியுள்ளனர். பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இதனை முடக்கி உள்ளதாக தெரிவித்த வருமான வரித்துறையினர் இந்த சொத்துக்கள் அனைத்தும் ஆசிரமத்தின் நம்பத்தகுந்த பக்தர்கள் அவர்கள் நடத்தி வரும் ஆன்மீக பள்ளியின் ஊழியர்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் விஜயகுமாரின் மகன் என் கே வி கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பிரீதா ஆகியோரின் மூலமாக பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. தமிழ்நாட்டில் கோவை மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சத்தியவேடு கர்நாடகம் ஆகிய இடங்களில் முடக்கப்பட்ட இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களை பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.