Categories
மாநில செய்திகள்

”4 நாட்களில் 8 குழந்தைகள் உயிரிழப்பு” அலட்சியத்தால் தொடரும் அவலம் …..!!

சுர்ஜித் மரணத்தை தொடர்ந்த அடுத்த 4 நாட்களில் 8 குழந்தை பலியாகி இருப்பது அனைவரையும் கண்கலங்கச் செய்கின்றது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்த சோகம் ஆறுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 4 நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பத்து மாதங்கள் சுமந்து பெற்று , பகலிரவாய் கண்விழித்து வளர்த்த குழந்தைகளை பெற்றோரின்  சிறு அலட்சியத்தால்பறிகொடுக்கும் அவலம் மிகவும் மோசமானது. விவரம் தெரியும் அளவிற்கு வரும் பருவம் வரை குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோரும் , உற்றாரும் பொறுப்பு. குழந்தைகளை பேணி காப்பதில் பொதுவாக  எல்லா பெற்றோரும் கண்ணும் கருத்துமாக தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு நேரத்தில் அவர்கள் காட்டும் சிறு அலட்சியம் அந்த குழந்தையின் உயிரையே காவு வாங்கி விடுவது பெரும் துயரம்.

அக்டோபர் 25-ஆம் தேதி அதாவது வெள்ளியன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து நான்கு நாட்களாக பகலிரவாய் தொடர்ந்த மீட்புப் பணிகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை சடலமாக மட்டுமே மீட்க முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே தூத்துக்குடி திரேஸ்புரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் மீட்பு நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு பெற்றோர் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த போது அவர்களின் 2 வயது குழந்தை சஞ்சனா குளியலறை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சோக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை அரங்கேறியது. பெரியவர்களின் அலட்சியத்தால் எங்கோ ஒரு குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த போது தன் குழந்தையை கூடுதல் கவனத்தோடு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கருதாத பெற்றோரின் சிறு அலட்சியமே அந்த குழந்தையின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.

அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 மாத குழந்தை லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து  மூழ்கி பெற்றோரின் சிறு அலட்சியத்திற்கு பலியானது.அடுத்த நாளான புதன்கிழமை அன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பண்டர கோட்டையில் கழிவுநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து பவளவள்ளி என்ற இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.

அதே நாளில் விருதுநகர் மாவட்டம் ஆமாத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து ருத்திரன் என்ற 3 வயது குழந்தை இறந்த சோகம் நடந்தது.அடுத்த நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள பண்ணை குட்டையில் தவறி விழுந்த ஹர்ஷித் என்ற 4 வயது குழந்தை பலியானது.

அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விரங்குப்பம் கிராமத்தில் யஸ்வஸ்திகா என்ற 3 வயதுக் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த சிறிய பிளாஸ்டிக்  டப்பாவில் முழங்காலளவு இருந்த நீரில் தலை குப்புற விழுந்து உயிர் இருந்தது.அதே நாளில் திண்டுக்கல் அருகே உள்ள பொன்மான்திறை புதுப்பட்டியில் ராஜசேகர் தேவி தம்பதியின் ஒரே பிள்ளையான பிரசன்னா என்ற ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறாக 4 நாட்களில் 8 குழந்தைகள் உயிரிழந்த என்பதை வெறும் செய்தியாக மட்டுமே கடந்து போய்விட முடியாது யாரோ ஒரு பெற்றோரின் சிறு கவனக்குறைவால் ஒரு குழந்தை இறந்ததை பார்த்த பிறகு தங்கள் குழந்தையை இன்னும் கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும் அனுபவத்தில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது இவ்வாறான மோசமான நிகழ்வுகளில் அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பெற்றோரிடம்பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இனியேனும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை .

Categories

Tech |