விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற கடத்தல் தொழில் தொடர்ந்து வருவதால் அதனை தடுப்பதற்காக அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் ரயில்வே கேட் அருகில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுக்கொண்டிருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் சிவகாசியை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம்(27) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 14 வெளிமாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைய்யது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது படந்தால் பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்த சரவணன்(20) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.