தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்க நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி உள்ள போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கோவில்களில் உண்டியல் உடைப்பு மற்றும் திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது.இதனால் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை தொடையோடு சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர் கன்னியாகுமரி முகிலன் குடியிருப்பை சேர்ந்த குமார் என்ற சுடலை பழம் என்பதும், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இவருக்கு குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு வழக்குகளும், இரணியல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 திருட்டு வழக்குகளும், வெள்ளிச்சந்தை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு வழக்குகளிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 3/4 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.