பிரேசில் அதிபர் போல்சனரோ குடும்பத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் கடலென பரவிக்கிடக்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பாதிப்புகளை கட்டுப்படுத்தி வந்தாலும், மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் பிரதிநிதிகள், முதன்மை தலைவர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு பெரும் தலைவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் பிரேசில் அதிபர் ஜூலை மாதம் ஏழாம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார்.
இவரை அடுத்து இவருடைய மனைவி மிச்செல் போல்சனாரோக்கு தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் அவரும் குணமடைந்து வீடு திரும்பினார். இவரைத் தொடர்ந்து இவருடைய இளைய மகன் ஜெயீர் ரீனன் போல்சனாரோவுக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய மூத்த மகனான பிளேவியா போல்சனரோ தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் எனக்கு எந்த ஒரு தொற்று அறிகுறியும் இல்லை என்றும், ஆனாலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் போன்ற மருந்துகளை வீட்டில் இருந்து தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.