காண்டிராக்டரை கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 12 – ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்ணன் கொலை வழக்கில் வாகைகுளம் பகுதியில் வசிக்கும் சங்கிலிபூதத்தார், நல்லதுரை, குருசச்சின், அம்மு வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் வாகைக்குளம் பகுதியில் வசிக்கும் முத்துமனோ என்பவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து ஜேக்கப் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். இதற்கு பழிக்குபழியாக கண்ணனை வெட்டி கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் சிங்கிகுளம் – பெத்தாணியாக பொத்தையடி மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி மலையின் மேல் பகுதிக்கு சென்று டிரோன் கேமராவை பறக்கவிட்டு தேடி வந்தனர். இதற்கிடையில் கண்ணன் உறவினர்கள் 4 -ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு, டி.ஐ.ஜி. பிரவீன்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் கண்ணனின் மனைவி புனிதா மற்றும் அவரது குடும்பத்தினரை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதில் புனிதாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு தமிழக அரசிடம் பரிந்துரை செய்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பின் அவரது குடும்பத்தினர் கண்ணன் உடலை வாங்க சம்மதித்தனர். இதனையடுத்து கண்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.