கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பல மாநிலங்களில் தொற்று ஓரளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சீனா மற்றும் இங்கிலாந்து மட்டும் அல்லாமல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து பதிலளித்த நீதிபதிகள் விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் அலை குறைந்து வரும் சூழ்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும், தொற்று பரவும் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தொற்று பரவல் தணியும் வரை பொதுமக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.