சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கீ. வீரமணிக்கு கடந்த 6-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ. ராசா இந்து மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெ.ஜெ கட்சியின் நிறுவனர் ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் எம்.பி ஆ. ராசாவின் பேச்சு இரு மதத்தினர் இடையே பிரச்சனையை தூண்டும் விதமாக இருப்பதோடு சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைத்துள்ளது.
இந்துக்கள் குறித்த சர்ச்சை கருத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசிய எம்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சி என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனவே இந்துக்கள் குறித்து சர்ச்சையான விதமாக பேசிய எம்பி ஆ. ராசா மீது காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த மனு கூடிய விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.