தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் பேசும் வார்த்தைகளால் நான் தூக்கம் இழந்து தவிக்கிறேன் என்றும் ஸ்டாலின் வேதனையோடு தெரிவித்து இருந்தார்.
திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு மற்றும் பொன்முடி போன்றவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சர்ச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பூகம்பம் வெடித்த நிலையில், எதிர்க்கட்சிகள் பலரும் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை அமைச்சர் பொன்முடி நீங்க எல்லோரும் ஓசியில் தானே போறீங்க என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் இலவச பேருந்துகளை பெண்கள் புறக்கணிக்கும் சில வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திமுக கட்சியின் மூத்த நிர்வாகியான சைதை சாதிக் அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியது மிகப் பெரிய பூகம்பமாக வெடித்தது. அதாவது பாஜக கட்சியை சேர்ந்த நடிகைகள் காயத்ரி ரகுராம், குஷ்பூ, நமீதா மற்றும் கௌதமி ஆகியோரை அவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக காரங்க இப்படித்தான். பொதுவெளியில் சர்ச்சையாக பேசுவதை வாடிக்கை என்று சாதிக் கூறியது ஒட்டுமொத்த திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் விதமாக அமைந்துவிட்டது.
இதை திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியதோடு தங்கள் கட்சி பெண்களை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் சைதை சாதிக் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த பிரச்சனையே இன்னும் அடங்காத நிலையில் தற்போது புதிய பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் ஊராட்சியை டி. எட்டப்பாளையம் என்ற பெயரில் தனியாக பிரிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் தேதி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் அமைச்சர் பொன்முடி அங்கு சென்றார்.
அப்போது பொதுவெளி என்று கூட பார்க்காமல் பொதுமக்களை அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் திட்டினார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், திமுக கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இப்படி பொதுவெளியில் அவதூறாக பேசும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை கண்டிக்காமல் இருப்பது எதற்காக என்று எதிர்கட்சிகள் பலரும் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். மேலும் கட்சியின் மூத்த அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு முதலமைச்சர் முட்டுக்கட்டை போடாவிட்டால் கண்டிப்பாக திமுகவின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்று திமுக கட்சியின் நலம் விரும்பிகள் கூறி வருகின்றனர்.