நாளை முதல் திருமழிசை தற்காலிக சந்தை செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சுமார் 2,000 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சந்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நேற்று திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், கோயம்பேடு அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திருமழிசையில் வியாபாரிகளிடம் கடைகள் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நள்ளிரவு முதல் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு நாளை காலை முதல் சந்தை செயல்பட தொடங்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அங்கு வழிகாட்டும் பலகை வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.