Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மடக்கி பிடிக்கப்பட்ட 2 லாரிகள்… சிக்கியது 3520 குக்கர்கள்… அதிரடி சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு லாரிகள் தஞ்சை நோக்கி வேகமாக வந்துள்ளது. உடனே அவர்கள் ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதற்கு அவர் காலி அட்டைப்பெட்டியை தான் லாரியில் ஏற்றி வந்தேன் என கூறிவிட்டு லாரியை எடுத்து சென்றுள்ளார். அதன்பின் அவர்கள் மற்றொரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் குக்கர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குக்கர் அட்டைப்பெட்டியில் ஜெயலலிதா மற்றும் டிடிவி தினகரன் உருவப்படம் மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன் ஆகியோர்களின் படம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர்.

மேலும் இதனையடுத்து காவல்துறையினர் தப்பிச்சென்ற லாரியை கொள்ளிடம் பாலம் சோதனைச்சாவடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த லாரியை மடக்கி பிடித்துள்ளனர். உடனடியாக அந்த இரண்டு லாரிகளும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டபின் அங்கு வைத்து இரண்டு லாரி டிரைவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் 3520 குக்கர்கள் இருப்பதாகவும் இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த குக்கர்கள் வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என அரியலூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் ஏழுமலை விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |