மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால் தையல் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் தையல் தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்கம்மா என்ற மனைவி உள்ளார். மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கங்கம்மாவுக்கும், ஆட்டோ டிரைவரான ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து தெரிந்தவுடன் சிவகுமார் தனது மனைவியை கண்டித்ததோடு, குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கங்கம்மா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து கங்கம்மா நடந்த அனைத்து சம்பவத்தையும் தனது கள்ளக் காதலனான ரவியிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரவி தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று சிவகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்ப்பதற்குள் ரவி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் தப்பித்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரை கொலை செய்ய முயன்ற 4 குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.