தூங்கி கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மழை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மணலி சின்னசேக்காடு தேவராஜன் தெருவில் ஜெயகோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோபியின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் கோபி பக்கத்து தெருவில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு செந்தாமரையை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு கோபி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கோபி வீட்டிற்குள் தேங்கி நின்ற மழை நீருக்கு நடுவில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தூக்கக்கலக்கத்தில் கோபி கட்டிலில் இருந்து தவறி மழை நீரில் விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை வீட்டிற்கு சென்ற செந்தாமரை தனது கணவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகோபியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.