வடமாநில தொழிலாளியை கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கட்டிட என்ஜினீயரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான சிபு தாக்கூர், ராஜேஷ்குமார் என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலை நடைபெறும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் இருவரும் வேலைக்கு வராததால் முத்துக்குமார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சிபு தாக்கூர் ராஜேஷ்குமாரை கடப்பாரையால் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சிபு தாக்கூரை வலை வீசி தேடி வருகின்றனர்