கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் மாணிக்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது தாய் வீட்டில் இருக்கும் முத்துமாரி தொலைபேசி மூலம் தனது கணவரிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியில் இருந்த மாணிக்கம் வாழ்க்கையை வெறுத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.