மது போதையில் தகராறு செய்த தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பகோடு அலெக்சாண்டபுரம் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜன், சுரேஷ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நாகம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகம்மாள் இறந்ததால் சுரேஷ் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அளவுக்கதிகமான மதுபோதையில் ராஜன் வீட்டிற்கு சென்ற சுரேஷ் தனது அண்ணியான விஜிலாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது எனது அம்மாவை சரியாக நீங்கள் கவனிக்கவில்லை என்று கூறி வீட்டின் ஜன்னல்களை அடித்து உடைத்துள்ளார். அந்த சமயம் வீட்டில் ராஜனின் மகனான ஆர்லின் என்பவரும் இருந்துள்ளார். இதனையடுத்து தகராறு முற்றிய போது தாய், மகன் இருவரையும் சுரேஷ் தாக்குவதற்கு முயன்றுள்ளார்.
அப்போது கோபமடைந்த ஆர்லின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது சித்தப்பாவான சுரேசை சரமாரியாக குத்தியதால் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆர்லின் மற்றும் விஜிலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.