மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இணைந்து தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் ஆண்டிச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டிச்சாமி தனது நண்பர்களான பாண்டீஸ்வரன், பெரியசாமி போன்றோருடன் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு மூன்று பேரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆண்டிச்சாமி மறுநாள் காலை தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆண்டிச்சாமியை தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமி மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.