ஜாமினில் வெளிவந்த தொழிலாளியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபெண்டா கிராமத்தில் தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநில எல்லையான உன்சனஹள்ளி பகுதியில் இருக்கும் தனியார் மதுபான கடைக்கு மது குடிக்க சென்ற சங்கரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இடப்பிரச்சனை காரணமாக ஒபேகவுடு என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு சென்ன கிருஷ்ணன் என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஒபேகவுடுவின் மகன்களான சங்கர், கணேசன், முருகேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த சங்கரை பழிவாங்கும் நோக்கத்தோடு மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்