தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த தொழிலாளர்கள் பல்லடம் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மங்களேஸ்வரன் எதற்காக கொலை செய்யப்பட்டார் எனவும், கொலை செய்தவர்களின் விவரம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.