பேருந்து நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வலது கையும், காலும் செயலிழந்ததால் வேலைக்கு செல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும், உணவு இன்றியும் இந்த குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். தற்போது சங்கர் வாடகை வீட்டை காலி செய்து விட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருக்கும் பேருந்து நிறுத்த நிழற்குடையில் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து வருகிறார். மேலும் கீதா வீட்டு வேலைக்கு சென்று தனது கணவன் மற்றும் மகனை காப்பாற்றி வருகிறார்.
இது குறித்து அறிந்த ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி சங்கரிடம் நேரில் சென்று விசாரித்துள்ளார். தற்போது சங்கர் குடும்பத்தினரை செங்குந்தபுரம் கிராமத்தில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா குடியிருப்பு கட்டிடத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் கீதாவிற்கு கடை அல்லது நிறுவனங்களில் வேலைக்கு ஏற்பாடு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சங்கரின் குடும்பத்தினருக்கு ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், போர்வை மற்றும் தலையணைகளை வழங்கியுள்ளார்.