கூட்டுறவு சங்கத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கே .ராஜகோபால் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். ராஜகோபால் பொன்னி அரிசி விற்பனை, எள் கொள்முதல், காலி சாக்குகள் போன்றவற்றை விற்பனை செய்ததில் கூட்டுறவு சங்கத்திற்கு வரவேண்டிய ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 678 -ல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர் சட்டத்திற்கு புறம்பாக முன்பணம் வழங்குவது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் தனி அலுவலர் ராஜகோபால், காசாளர் பாண்டுரங்கன், சங்கப் பணியாளர் கலியமூர்த்தி ஆகிய மூவர் மீது குற்றப் புலனாய்வு போலீசார் கூட்டுறவு ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த பெரம்பலூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் கூட்டுறவு சங்க மோசடியில் ஈடுபட்ட ராஜகோபால், பாண்டுரங்கன் மற்றும் கலியமூர்த்தி ஆகிய மூவருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனை அளித்து மேலும் ரூபாய் 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட அம்மூவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.