கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பிரபல தொழிலதிபர் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வரக்கூடிய ஒரு தொற்றுநோய் கொரோனா வைரஸ். இது ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் விரைவாக ஏராளமானோரை பாதிக்கும் என்பதால், இது பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கொண்டு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகமானால் இடம் போதாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பிரபல திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அதன்படி,
நடிகர் கமலஹாசன், கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனது வீட்டையே எடுத்துக்கொள்ளுமாறு அரசிடம் வலியுறுத்தினார். அதேபோல் கொல்கத்தாவில் தற்போது பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் தனது 30 பங்களாக்களை அரசுக்கு தானமாக அளித்துள்ளார். மேலும் அங்கு வந்து தஞ்சமடைவோருக்கு சுகாதார தேவை, உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய தாமே முன்வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த செயல் நாட்டு மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.