ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற நோயாளியை அதிகாரிகள் மீட்கச் சென்ற போது, மருத்துவமனைக்கு அழைத்தால் கட்டி பிடித்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு விகிதம் குறைவாகவே தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் முட்டாள்தனமாக தப்பிச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம். அந்த வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் தப்பிச் சென்று புளியந்தோப்பு சிவராஜபுரம்பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருக்கிறார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முயற்சித்த போது மருத்துவமனைக்கு அழைத்தால் வெளியே வந்து அனைவரையும் கட்டிப் பிடித்து விடுவேன், எச்சில் துப்பிவிடுவேன் என மிரட்டல் விடுத்து வருகிறார். இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் அவரை சமாதானபடுத்தி அழைத்து செல்லும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.