திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காவல்துறையினர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி வாலிபர் ஒருவர் உலா வந்துள்ளார். மேலும் தன்னை அவர் கொரோனா நோயாளி என்று சொல்லி கொண்டு, தனக்கு உதவி செய்யுங்கள் என்று அங்கு வாகனங்களில் சென்றவர்களிடமும், பொதுமக்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடமும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை துரத்தி கொண்டு அவரை பிடியுங்கள் அவர் ஒரு கொரோனா நோயாளி, மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி வந்துவிட்டார் என்று சொல்லியவாறு துரத்தி வந்து கொண்டிருந்தனர்.
அதை கேட்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். இதனால் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டம் பிடித்த மக்களை அழைத்த கொடைக்கானல் காவல்துறையினர் இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்த வாலிபர் கொரோனா நோயாளியாக சித்தரிக்கப்பட்டவர். அவரை கண்டு அச்சம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர். ஆகவே இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியில் செல்ல வேண்டாம் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.