அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தினமும் சராசரியாக மூன்று லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கடந்த வாரம் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் டெல்டா வைரஸால் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது” என்று கெய்சர் பேமிலி பவுண்டேசன் மூத்த துணைத்தலைவர் ஜென் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி அதிகபட்சமாக கொரோனாவால் 19,334 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சுகாதார நிபுணர்கள் டெல்டா வைரஸால் இந்த மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.