கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் கொரோனா இல்லாத ஒரு பச்சை மண்டலம் ஆகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் ஓசூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அடுத்தபடியாக சூளகிரியில் 2 மூதாட்டிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வந்தது. இதையடுத்து சூளகிரி பகுதியில் 2 மூதாட்டிகள் வசிக்க பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2 மூதாட்டிகள் மூலமாக தற்போது அந்த பகுதியில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை மட்டும் இல்லாமல் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.