விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்தது. மேலும், இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, நோய் அறிகுறியுடன் 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது. கோயம்பேடு சந்தை மூலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.