சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாக கொரோனா பரவல் அதிகம் உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் செவிலியருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.