தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,392 பேர் குணமடைந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராயபுரம், கோடம்பாக்கம் , திரு.வி.க நகரில் , அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில் 1,000கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.