டெல்லியில் இளம் மருத்துவர் அனாஸ் முஜாஹித் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி முதல்வர் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் டெல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் பணியாற்றி வருவதால் வீட்டில் வந்து தங்காமல் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
ரம்ஜான் நோன்பு அன்று வீட்டிற்கு வந்து ரம்ஜானை கொண்டாடி விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது . இதையடுத்து அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதை எடுத்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். தலை மற்றும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இரவு 8 மணி அளவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது தந்தையிடம் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். இதுகுறித்து அனாஸ் தந்தை கூறும்போது எனது மகன் இந்தியாவிற்காக கடமை ஆற்றும் போது உயிரிழந்தான் எனது மற்றப் பிள்ளைகளும் இந்தியாவிற்கு சேவை செய்வார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.