உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் இருந்து மகனின் திருமணத்திற்காக கூடங்குளம் வந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. முதியவர் உடலில் இருந்து சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி மற்றும் 77 வயது முதியவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை சென்னையில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானதாக தகவல் வெளியானது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், கொடுங்கையூரை சேர்ந்த 46 வயது ஆண் நபர் ஆவார்கள். ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மண்ணடியை சேர்ந்த 75 வயது முதியவர் பலியாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பூந்தமல்லியை சேர்ந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஓட்டேரியை சேர்ந்த 46 வயது ஆண் நபர் கொரோனவால் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், அதிகாரபூர்வ தகவல் சுகாதாரத்துறை வெளியிடும் போது தான் தெரியும் என கூறப்படுகிறது. நேற்று வரை பலி எண்ணிக்கை 111 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.