Categories
மதுரை மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து!

கொரோனா காரணமாக மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம், பூத, அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்கப்பல்லாக்கு, வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஷ்வரர், யாழி வாகனத்தில் அம்மனும் அப்பனும் வலம் வருவார்கள். சித்திரை திருவிழா நடைபெறம் பத்து நாட்களும் மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

அழகர்மலையில் இருந்து எழுந்தருளி மதுரைக்கு வரும் கள்ளழகருக்கு மே 6ம் தேதி விடிய, விடிய தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெற்று, 7ம் தேதி காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவம் நடைபெறும். இந்த திருவிழா உற்சவங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் கடித்தம் எழுதியிருந்தது.

ஆனால் தற்போது மதுரையில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 08.05.2020 அன்று முக்கிய நிகழ்வான மண்டூக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |