Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – தமிழகத்தில் நாளை மறுநாள் கடைகள், உணவகங்கள் அடைப்பு… பால் விநியோகமும் இல்லை!

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

வணிகர்கள் தற்போதைய நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உணவகங்களுக்கு விடுமுறை என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று கடைகள் அடைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் நாளை மறுநாள் (22-03-2020) மட்டும் தனியார் பால் விநியோகம் செய்யப்படமாட்டாது என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை கூடுதல் நேரம் பால் விநியோகம் நடைபெறும் என்றும், தேவையான அளவு பாலை நாளையே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைகள், உணவகங்கள் மற்றும் பால் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |