சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு துணை சூப்பிரண்டு சபாபதி தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தேவையில்லாமல் ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு திருவேகம்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.