வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவானது என்பது அமெரிக்காவின் யூகமே என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து மிகவும் வலுவான அறிக்கை ஒன்றை நாங்கள் வெளியிடுவோம்.
அது சரியான முடிவாக இருக்கும் என நேற்று அதிபர் தெரிவித்திருந்தார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வார்த்தை போர் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் அமெரிக்கா இதுவரை வூஹான் நகரில் இருந்து தான் கொரோனா தொற்று தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசர இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில் “சீனாவில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா தோன்றியது என்பதற்கு சான்றாக அமெரிக்கா இதுவரை எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து எந்த தகவலும் அல்லது குறிப்பிட்ட எந்த ஒரு ஆதாரத்தையும் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெறவில்லை. ஆகையால் இது அமெரிக்காவின் யூகமாகவே உள்ளது என கூறியுள்ளார்.