Categories
மாநில செய்திகள்

பிரதமரின் விளம்பர, தற்பெருமை திட்டங்களை ரத்து செய்தால் கொரோனா நிதி கிடைத்து விடும் – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்குக் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

இதன் மூலம் எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி மத்திய அரசு நிதியில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸின் தாக்கத்தால் செலவினங்களுக்கு அரசு நிதியை திரட்ட வேண்டும் என்றால் அதற்கு வேறு பல வழிகள் உள்ளன.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கையில் எடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகாரத்தை குறைப்பது போலவும், அதிபர் ஆட்சி முறை போன்ற ஒன்றை மறைமுகமாக புகுத்துவது போல உள்ளது.

இந்த அரசாங்கம் பிரதமரின் விளம்பரங்களுக்கும், தற்பெருமைக்கும் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீணாக்கும் திட்டங்களை ரத்து செய்தாலே அதற்கான நிதி கிடைத்து விடும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் விளம்பரங்களுக்கு ரூ. 5200 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திற்கு ரூ. 510கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |