ஏ ப்ரல் 9ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 31 ஆம் தேதியோடு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடையும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்ம் என்று சபாநாயகர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த இரண்டு நாட்களாகவே முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் கூடியதில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ம் தேதியோடு முடித்துவிடலாம் என்று தெரிவித்தார்.
அதேபோல காலை , மாலை என இரண்டு வேளைகளிலும் சட்டப்பேரவையை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கி 2 அல்லது 3 மணி வரை விவாதங்கள் நடைபெறும். அதன்பிறகு பிற்பகலில் 5 மணிக்கு மீண்டும் தொடங்கி அவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். காலை , மாலை என இருவேளைகளிலும் அவையை நடத்தி மார்ச் 31ம் தேதியுடன் அனைத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.