கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலங்காடு மயானத்தில் வன்முறையில் ஈடுபட்ட 20 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.