கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.