தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
நாட்டிலேயே அதிக பரிசோதனையை மேற்கொண்ட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் கட்டுக்கடங்காமல் செல்கிறது.அதே நேரத்தில் கொரோனாவை சிறப்பாக கையாண்டு நாட்டிலேயே குறைவான இறப்பு வீதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. தினமும் மாலை நேரத்தில் தமிழக சுகாதாரத் துறை சார்பாக தகவல் கொரோனா நிலவரம் வெளியாகும்.
அந்தவகையில் நேற்று வெளியான தகவலில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1000த்தை கடந்தது. 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு முதலாக 1000 என்ற எண்ணிக்கையை கடந்து தமிழக மக்களை தூக்கி வாரிப்போட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22,333 என்று எகிறியது. இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு வெளியானதில் 2ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 967 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 1322 குழந்தைகள் தொற்று உறுதியாகியுள்ளது. 10138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால் 184 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 138 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 13,170ஆக உயர்ந்துள்ளது.