Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனை..!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ஏற்கனவே, இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி, ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த ஊரடங்கை ஏப்ரல்30ம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பின் தற்போதைய நிலை குறித்தும், ஊரடங்கை தளர்த்தும் முடிவை அரசு எடுப்பதாக இருந்தால், அதற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், நேற்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், பச்சை மண்டல பகுதியில் ஊரடங்கை தளர்த்துவது குறித்தும், மே 3ம் தேதி பிறகு எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தர ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதேபோல, ஒடிசா முதலமைச்சருடனும் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Categories

Tech |