கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு சம்பள உயர்வு பெறாத ஊழியர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை போனஸ் ஆக வழங்க, எம்.ஆர்.எப்., டயர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு கொரோனா காலத்தில் சம்பள உயர்வில்லாத நிலையிலும் ஊழியர்கள் பணியாற்றினர். அந்த ஊழியர்களை பாராட்டும் வகையில், ஒரு மாத சம்பளத்தை போனஸ் ஆக வழங்கவிருப்பதாக, இந்நிறுவன சேர்மன் மாமென் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிறுவன லாபம், 521 கோடி ரூபாயாக இருந்தது. பொருளாதார செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளதன் அறிகுறியாக டயர்களின் விற்பனை, தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கொரோனா காரணமாக, சம்பளத்தை குறைத்த வேறு சில டயர் நிறுவனங்களும், தங்கள் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளன. அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு டயர் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதையே இந்த முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.