கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் அனுமன் சாலிசா பாடவேண்டும் என பாஜக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் இருக்கும் என பாஜகவினர் கூறுகின்றனர். எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது:”நாம் அனைவரும் சேர்ந்து மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கும் கொரோனா நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஆன்மீக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 5 வரை தினமும் ஐந்து முறை ‘அனுமன் சாலிசா’ மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். ஆகஸ்ட் 5-ஆம் தேதி வீட்டில் ராமருக்கு ஆரத்தி எடுத்து, விளக்குகளை ஏற்றி சடங்கினை முடிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய பிரதேச அரசு போபாலில் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஊரடங்கு முடிந்ததும் ஹனுமன் சாலிசா சடங்கு ஐந்தாம் தேதி முடிவடையும். அச்சமயம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பூமி பூஜை செய்யப்படும். அந்த நாளை தீபாவளி போல கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ‘அனுமன் சாலிசா’ வை ஒரே குரலில் ஓதினால் நிச்சயம் பலனளிக்கும், கொரோனாவின் பிடியில் இருந்து விடுபடலாம். இதுவே ராமருக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.