வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சவாரிக்கு சென்றதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறிகள் எதுவும் பெரிதாக இல்லாததால் ஆட்டோ டிரைவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இல்லாமல் சவாரிக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் அங்கேயே காத்திருந்து சவாரிக்கு சென்ற ஆட்டோ டிரைவர் திரும்பி வந்தவுடன் அவரை கண்டித்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விதிகளை மீறி ஆட்டோ டிரைவர் வெளியே சுற்றித் திரிந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு வேனில் அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறும்போது, தனிமைப்படுத்தப்படும் நபர்கள் வெளியில் சுற்றித் திரிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், தனிமைப்படுத்தப்படும் வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரித்துள்ளனர்.