விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கடந்த 15ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து இவர் பணியாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து தலைவர் மாளிகை தரப்பில் இதறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, நாடாளுமன்ற பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில், விமான போக்குவரத்துக்கு ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. இதைடுத்து ஏப்ரல் 15ம் தேதி வரை அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3,869 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 1,659 பேருக்கும், தமிழகத்தில் 1,596 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 1,552 பேருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.