கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுள்ளனர்” என தெரிவித்தார். மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் சதவீதம் 13.85% ஆகும்.
நாடு முழுவதும் மொத்தம் பாதிக்கப்பட்ட 14378 பேரில், 4291 (29.8%) பேர் நிஜாமுதீன் மார்க்கஸ் கிளஸ்டருடன் தொடர்புடையவர்கள் ஆவர். இந்த மதக்கூட்டத்தில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் 84%, டெல்லியில் 63%, தெலுங்கானாவில் 79%, உ.பி.யி-ல் 59% மற்றும் ஆந்திராவில் 61% மக்கள் இந்த மத நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள் என இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார்.